செ.வைசாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செ.வைசாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 டிசம்பர், 2019

பயணங்கள்

பயணம் என்றாலே பிடிக்காதவர்கள் உண்டா? 
பேருந்தின் ஜன்னல் ஓர பயணம்..
தொடர்வண்டியின் வளைவுகளுடன் பயணம்..
இருசக்கர வண்டியின் இரவு நேர பயணம்..
நான்கு சக்கர வண்டியின் நெடுந்தூரப் பயணம்..
இருகால் துணையோடு இருகரங்களை இணைந்தபடி  மெல்லிய பயணம்..
குழந்தையின் தத்திதவழும் பயணம்..
ஆகாயத்தில் மேகத்தினுள் நுழைந்தபடி இன்ப பயணம்..
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..
ஏனென்றால் பயணம் என்பது பிறப்பில் தொடங்கி மரணம் வரை விடைத் தெரியாமல் போகும் ஒரு வழியாகும்..
எனவே போகும்வரை இரசித்து கொண்டே செல்வோம் நமது பயணங்களை ..
பயணங்களை அனுபவத்துடனும் பயனுடவும் சென்றிடுவோம்..வாழ்ந்திடுவோம்..

திங்கள், 15 அக்டோபர், 2018

கலாமுக்கு எனது கவிகளின் சலாம்..




என்னை செதுக்கிய சிற்பிக்கு பிறந்தநாள்..
என்னை வழிநடத்திய குருவிற்கு பிறந்தநாள்..
என்னை தளரவிடாமல் செய்த தன்னம்பிக்கைக்கு பிறந்தநாள்..
என்னை தலையில் குட்டும் சிந்தனையாளனுக்கு பிறந்தநாள்..
என்னை துன்பத்தில் இருந்து காக்கும் காவலனுக்கு பிறந்தநாள்..
என்னை முத்தமிடும் எண்ணங்களின் எழுத்தாணிக்கு பிறந்தநாள்..
என்னை ஆதரித்த அழகியத்தமிழ் மகனுக்கு பிறந்தநாள்..
என்னை தழுவி அனைத்து கொண்ட அன்னைக்கு பிறந்தநாள்..
என்னை வீழாமல் தோள் கொடுத்த தோழனுக்கு பிறந்தநாள்..
என்னை மனிதியாக வெளிவர உதவிய சிறகுக்கு பிறந்தநாள்..
என்னை மட்டுமல்ல பல இளைஞர்களை கனவு காண செய்த கனவு நாயகனுக்கு பிறந்தநாள்..
என்னை பெறாமல் நான் தத்தெடுத்த என் தந்தைக்கு பிறந்தநாள்..
உன்னை போற்றி பேசிட என்னிடம் வார்த்தைகள் இல்லை..
எனவே உனது கால்களை முத்தமிட்டு வணங்கி தொழுகிறேன்.. 


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கலாம் அப்பா..

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

முன்னாள் மாணவியாக நான்...!




வாழ்க்கை பயணம் எங்கே தொடங்கும்.?  எங்கே முடியும் என்று யாராலும் சொல்ல முடியாது.. கடைசி வரை எதை தேடுகிறோம்.?  எதற்காக இந்த பயணம்.? என்று கூட தெரியாமல் இருக்கிறோம்..

வாழ்க்கையில் நாம் கற்றுக் கொண்டதை விட நமக்கு கற்பிக்கப்பட்டவை தான் அதிகம். ஒவ்வொரு நபர்களும் ஒவ்வொரு அனுபவம். அனுபவங்களே நம்மை செதுக்குகிறது.

நான் எதை பற்றி எழுதுவது என்று தெரியாமல் தான் எழுத துவங்கினேன்.. இப்பதிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பல நினைவுகளையும் வெளிப்படுத்தும் என்று நம்பிக்கையுடன் எனது தமிழ் உறவுகளோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

கல்லூரி சேர்ந்த முதல் நாள். பல பல கற்பனை கனவுகளோடு உள்நுழையும் சாதரண மாணவி. கல்லூரியில் கிடைத்த ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் உதவியோடு நடைப் பழகும் மாணவி. முதலாமாண்டு படித்து கொண்டிருக்க தமிழ் மீது ஏற்பட்ட ஆர்வம் அதற்கு சரியான உந்துதலாக அவளது ஆசிரியர் துணை நிற்க. தமிழ் தட்டச்சு பயில துவங்குகிறாள். அவளின் ஆர்வம் தமிழ் தட்டச்சு மூலம் வலையுலகிற்கு அறிமுக செய்யப்படுகிறார். அவரின் ஆசிரியரின் உறுதுணையாக இருக்க பல சமூகத் தளங்களில் தனது நிழற்படங்கள் மூலமும் உண்மை முகவரியுடனும் வலம்வர துவங்குகிறார்.

ஒவ்வொரு நாளும் புதுப்புது நண்பர்கள். அனைவரும் அறிவு மற்றும் அனுபவத்தில் சிறந்தவர்கள். தவறுகளை சுட்டிக் காட்டி திருத்தவும் ஒரு பெரும் நட்பு வட்டம் கிடைக்கிறது. பெண்கள் சமூகத் தளங்களில் இருக்க இயலாது என்பதை மாற்றி அமைக்கப்பட்டது அவரின் ஆசிரியர் மூலம் தான்.

இதுவரை 2500 - க்கும் மேற்பட்ட நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் என வலம்வரும் மாணவி. மூன்று முறை வலைப்பதிவர் என்ற ஆர்வத்தை பாராட்டி விருதுகளும் மூன்று கல்லூரிக்கு வலைப்பதிவர் என்ற முறையில் சிறப்பு  விருந்தினராக பங்கேற்றும் தமுஎகச - வில் ஒரு முறை சிறப்பு பேச்சாளராகவும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் மாநில மாணவிகள் ஒருங்கிணைப்பாளராகவும் ஈரோடு வாசகசாலை சிறப்பு வாசகராகவும் என பல இடங்களில் தனித்துவமாக திகழும் அந்த சாதாரண மாணவி இப்போது சாதனை மாணவியாக உங்கள் முன்பு நான் வைசாலி செல்வம்.

கே. எஸ். ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவியான நான் வைசாலி செல்வம் என்ற பெயருடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் இணையத்தில் வலம்வருகிறேன்.இதற்கு காரணமாக இருந்த  எமது கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.கார்த்திகேயன் ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் என்னை ஊக்குவித்த எமது கல்லூரி பேராசிரியர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த நன்றிகளும் என்னை சகோதரியாகவும் தோழியாகவும் உற்சாகப்படுத்திய எமது சகோதரிகளுக்கும் எனது தமிழ் எழுத்துகளை வாசித்து பிழைகளை சுட்டியும் என்னை வளர்த்து கொண்டிருக்கும் எனது தமிழ் உறவுகளாகிய வலைப்பதிவர் அனைவருக்கும் கனிவான நன்றிகள்.

என்னை பெற்றெடுத்த தாய் தந்தைக்கும் உடன்பிறப்புகளும் நன்றிகள். எல்லாருக்கும் நன்றிகள் சொல்லி விட்டேன். ஆனால் ஒருவருக்கு சொல்லவில்லை. ஆம் என்னை பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக பல முறை அறிமுகப்படுத்தியவர் ஒருவர் இருக்கிறார்.என்னை பெற்றவர்களை விட என்னை பற்றி தெரிந்தவர் அவரே. எனக்கு தெரியாது எனக்குள் என்ன திறமை இருக்கிறது என்று. ஆனால் எனக்குள் இருந்த திறமையை வெளிப்படுத்த அவரால் மட்டுமே முடிந்தது.

எனது வாழ்நாளில் நான் அடைந்த மிகப்பெரிய பொக்கிஷம் தான் அவர். எனது குரு என்பதை விட எனது வெற்றிகளின் தந்தை என்று சொல்வதில் மகிழ்கிறேன். ஆம் அவர் வேறு யாருமில்லை தங்கள் அனைவருக்கும் அறிமுகமானவர். முனைவர் இரா. குணசீலன் வலைப்பதிவராக உங்கள் அனைவருக்கும் அறிமுகமானவர். என்னுடைய செயல்களின் வெற்றிக்கு தந்தை இவரே.

மூன்றாண்டு எனக்கு கிடைத்த அங்கீகாரம்  இவரையே சாரும். இப்பதிவு என்னை பற்றிய தற்பெருமை அல்ல. எமது கல்லூரியின் முன்னாள் மாணவியாக எமது கல்லூரியில் நான் அடைந்த மாற்றங்கள். எமது கல்லூரி என்னை மட்டுமல்ல என்னை போல பல மாணவிகளின் தனித்திறமைகளை கண்டுபிடித்து ஊக்குவிக்கும் இடமாக பார்க்கிறேன் அதனை வெளிப்படுத்தவே இப்பதிவு.

குருவிற்கு  நிகரில்லை குருவின்றி நிறைவில்லை.எமது கல்லூரியே எனது வாழ்க்கையின் முதல் திருப்புமுனை.. 

வெள்ளி, 30 மார்ச், 2018

கனவுக்கு உயிர் கொடுப்பேன். ..



பசுமையான வயல்வெளிகள்..
பாட்டி தாத்தா சொன்ன கதைகள்..
பள்ளிக்கு போக மறுத்த நாட்கள்..
குச்சிமிட்டாய்க்கும் பஞ்சுமிட்டாய்க்கும் அழுந்த நாட்கள்..
கோயில் கடைகளில் அடம்பிடித்து வாங்கிய பொருட்கள்.
அப்பாகிட்ட அடி வாங்கின நாட்கள்..
அம்மா சமைக்கும் போது ருசித்த நாட்கள்..
ஊர் பெருசுங்க பேசும் வதந்திகள்..
பேருந்தில்  பயணச்சீட்டு  வாங்காமல் சென்ற நாட்கள்..
நாட்குறிப்பேட்டில் மட்டும் புதைந்து போன விவரம்  அறியா காதல் கதைகள்..
நண்பர்களுடன் சமைத்த கூட்டாஞ்சோறு..
பம்பு செட்டில் நீராடிய நாட்கள்..
கில்லி விளையாடிய நாட்கள்..
பட்டம் செய்து தர சொல்லி போட்டி போட்டு விளையாடிய நாட்கள்..
டாம் & ஜெர்ரி பாப்பாய் பார்த்து பொழுது போக்கிய நாட்கள்..பள்ளியில் சென்ற சுற்றுலா பயணங்கள் ..
அப்பா சட்டையில் காசு திருடி உண்டியலில் சேர்த்தது..
நண்பர்களுடன் வீதியில் போட்ட ஆட்டம் பாட்டங்கள்..
பிறந்தநாள் என்றால் புது ஆடையில் ஒரு நாள் கூத்து..
ஒரு ரூபாய்க்கு வாடகை சைக்கிள் வாங்கி ஊரை சுற்றிய நேரங்கள்..பள்ளி தோழனின் மரணம்...
அப்துல் கலாம் வருகையை எதிர்பார்த்து ரோட்டில் காத்திருந்த நேரம்..
வானில் போகும் வான ஊர்திக்கு கை வீசி டாட்டா காட்டிய நேரங்கள்..
அன்றைய இரயில் நிலையம் இன்றைய விமானம் நிலையம் போன்ற பிரமிப்பு..
விருந்தினர் வருகையால்  வீட்டில் சமைக்கும் கறிச்சோறு..
அம்மை போட்டால் பள்ளிக்கு விடுமுறை..
மழை வந்தால் பேப்பரில் விட்ட டைடானிக் கப்பல்..
கண்களை மூடியே பார்த்த பேய் படங்கள்..
இரவு நேரங்களில் பாத்ரூம் போக பயந்து படுகையை நனைத்த நாட்கள். .
பள்ளி ஆண்டுவிழாவில் ஆடிய முதல் நடனம்  அரங்கேற்றிய நாடகம்..
டிவி பார்க்கையில் இதுக்கு பின்னால் மனிதர்கள்  உள்ளனரா என்று பார்த்த நாட்கள்..
விக்கிரமாதித்தன் வேதாளம் தொடர்கதைகள்..
சிந்துபாத் கதைகள்... சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த பட்டிமன்றங்களே ஞாயிறு தோறும் வீட்டில் பார்க்கப்படும்...
டாப் டென் சினிமா.. டாப் டென் பாடல்கள்..
ஆண் (ம) பெண் நண்பர்களுடன் சேர்ந்து சென்ற திரையரங்குகள்..
விடுமுறைக்கு ஊருக்கு சென்றால் திரும்ப வரவே பிடிக்காத நாட்கள்..
பட்டாசு வெடிக்கையில் ஓட்டையான புது துணி..
பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாகும்  நேரங்கள். .
பெரியவள் ஆனதும் பூப்பு நன்னீராட்டு விழா அத்தை மடியில் கொண்டாடிய நேரங்கள். .
வீட்டில் பாம்பு வந்ததும் பக்கத்து வீட்டு அண்ணாவை அழைத்து வந்து பாம்பை அடித்த நாட்கள்..
எதற்கு நடுகிறோம் என்று தெரியாமல் நட்ட மரங்கள். .
டியுசன் டீச்சர் அடித்து சொல்லிக் கொடுத்த பாடங்கள்..
அரசியல் பேச்சு பேசிய டீக்கடை  அண்ணாக்கள்..
ஓட்டுக்கு பிரியாணி காசு வாங்கி ஓட்டு போட போனவர்கள்..
கணக்கு வாத்தியாரை பார்த்தாலே கால் நடுங்கும்..
ஆலமரத்தில் ஆடிய ஊஞ்சல். .
புளிக்கொட்டையில் ஆடிய பல்லாங்குழி.. ஐந்தாங்கல் பாம்பு கரம் தாயம் ஆடியது..
மாமா கூட வண்டியில் போன பயணங்கள். .
குமரியை நடுங்க வைத்த சுனாமி. .
கும்பகோணத்தில் கருகிய குழந்தைகள்..
சுதந்திர தின விழாவில் மிட்டாய் வாங்கவே சென்ற நாட்கள்..வாட்ச் கட்டிய முதல் நாள்  மணி பார்க்க கூட தெரியாத நாட்கள். .
இப்படி ஓடிக் கொண்டு விளையாடிய நாட்களில் திடீர் திருப்பங்கள் நண்பர்களை பிரிந்து சென்று கல்லூரியில் சேர்ந்த நாட்கள்..
நிமிர்ந்து பார்க்கையில் ஒரு தனி மனிதியாக இனி எதிர்காலத்தின் கனவுகளோடு நான்..
திரும்பி பார்த்தேன் அத்தனையும் கனவு போல வந்து சென்றன..
போட்டிகள் நிறைந்த உலகம்..
முகமூடியை அணிந்த மனிதர்கள். .
ஊழல் இலஞ்சம்  உள்ள அரசு மற்றும் அரசியல்..
பணத்தை தேடி ஓடும் ஒரு கூட்டம். .
படிப்பை விற்கும் ஒரு கூட்டம்..
வேலை வாய்ப்பு தேடும் ஒரு கூட்டம். .
உணவு தேடும்  ஒரு கூட்டம். .
இப்படி பல கூட்டங்களுக்கு நடுவில் கல்லூரி படிப்பின் இறுதியில் நான்.  வாழ்க்கையின் உண்மையான காரணம் தேடும் நோக்கில் நான் ..கண்ணில் தைரியத்துடன் மனதில் நம்பிக்கையுடன் அடுத்த கட்டத்துக்கு பயணிக்க  உள்ளேன்...

ஒன்றுமட்டும் என் நெஞ்சில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது...

வீழ்வேன் என்று நினைத்தாயோ...!!!

புதன், 13 டிசம்பர், 2017

இளம் பெண் பேச்சாளர்கள் தேடல்..



அதிகம் யாரும் பயணிக்காத பாதையில் துணிச்சலுடன் செல்லும் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் எமது கல்லூரியில் மாபெரும் பேச்சுப்போட்டி வருகிற ஜனவரி 6 அன்று  நடைபெறவுள்ளது.

இப்பேச்சுப்போட்டி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளை அடிப்படையாக வைத்து  11 மற்றும்  12 - ம் வகுப்புகளில் பயிலும் மாணவிகளுக்கு பல்வேறு நிலைகளில் நடத்தப்படும். மேலும் சிறந்த பள்ளிக்கு சிறப்பு பரிசான LED  டிவி வழங்கப்படும்.

வளர்ந்து வரும் நாட்களில் அன்று முதல் இன்று வரை ஆண் பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் பெண்களின் எண்ணிக்கை மிக குறைவாக தான் உள்ளது என்பதில் ஐயமில்லை.

இளம் பெண் பேச்சாளர்களை ஊக்குவிக்கும் வகையில்  பேச்சுப்போட்டி நடைபெறும் என்பதை பெருமிதத்துடன் தெரிவிக்கிறோம். ஆர்வமுள்ள பள்ளி மாணவிகள் உங்கள் பேச்சு திறமையை நிரூபிக்க இது ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்விழாவிற்கு தமிழ் உறவுகள் தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்...

செவ்வாய், 5 டிசம்பர், 2017

பன்னாட்டுக் கருத்தரங்க அறிவிப்பு


கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில்,வணிகவியல் துறை சார்ப்பில் நடத்தும் முதலாமாண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம்.
தலைப்பு - "EARNINGS MANAGEMENT PRACTICES IN INDIA"
கருத்தரங்க நாள் - 05.01.2018


கட்டுரை வழங்க இறுதி நாள் - 20.12.2017

தொடர்புக்கு - 8807473229 ( Dr.R.Vasuki - Head, Department of Commerce )

தாங்கள் கட்டுரை வழங்கி கருத்தரங்கை சிறப்பிக்குமாறு 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




ஞாயிறு, 28 மே, 2017

நல்லதை விதைப்போம்..



நாம் என்ன விதைக்கிறோமோ அதை தான் நாளை அறுவடை செய்ய போகிறோம் என்பதை உணர்ந்தால் இன்று நீதியா..? ஆட்சியா..? மாட்டு இறைச்சியா..? கார்ப்பரேட்டா..? பணமா..?  நடிகனா..?  தலைவனா..? தலைமையா..? என்ற பேச்சுக்கு இடமில்லாமல் இருக்கும்.

இன்றைய அரசியல் கட்சிகள் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதாக தெரியவில்லை.
மக்களால் மக்களுக்காக மக்களே தேர்தெடுப்பது மக்களாட்சி என்ற நிலைமாறி பணத்தால் மக்களே பணத்துக்காக நாட்டை கட்சிகளுக்கு விற்றது என்ற நிலையில்  இன்றைய (பண)ஆட்சிமுறை.

காமராசர் போன்ற மாமனிதன் விதைத்து சென்ற நல்லாட்சிக்கு இன்றைய சமூகம் செயற்கை உரங்களை தூவிக் கொண்டு வருகிறது. இதன் விளைவு நமக்கும் நமது தலைமுறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறியாத பேதமை மக்கள் தங்களின் அறியாமையை உணர முற்படுவதில்லை.

ஐந்நூறு ரூபாய்க்கும் ஒரு குவாட்டரும் ஒரு பிரியாணியும் இதற்கு ஆசைப்பட்டு குறிப்பாக இலவசம் என்பதற்கு அடிமையாகி தனது ஓட்டையும் உரிமையும் விற்பனை செய்து விட்டு இப்போது ஆட்சி சரியில்லை தலைமை சரியில்லை அரசு செயல்படவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.. ஆனால் இதில் என்ன வேடிக்கை என்றால் தன்னை தானே விலைக்கு விற்பனை செய்துவிட்டு என் ஓட்டு என் உரிமை என்று பேசிக்கொண்டு இருப்பது தான்.

ஒற்றுமையே பலம் என்றனர் ஆனால் நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லை.யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றனர் ஆனால் அண்டை மாநிலத்தில் இருந்து தண்ணீர் கூட தருவதற்கு தயாராக இல்லை. ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்றனர் ஆனால் பள்ளிக்கூடங்களில் சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள்.விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு என்றனர் ஆனால் நிலங்கள் எல்லாம் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு என்கிறார்கள்.விளை நிலங்கள் விலை நிலங்களாக உள்ளது.

அரசு மற்றும் அரசியல்வாதிகளிடம் நான் கேட்டுக் கொள்வது  கல்வி மருத்துவம் தண்ணீர் மின்சாரம் இவைகளை இலவசமாக வழங்குங்கள் நாடு செழிப்புடன் இருக்கும்.குறிப்பாக தாய்மொழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும்.

நமது பாட்டன் பாரதியின் எண்ணங்கள் படி எல்லா துறைகளின்  அறிவும் தமிழில் இருக்க வேண்டும் என்பதை நிஜமாக்க வேண்டும். கலாமின் தொலைநோக்கு படி அறிவியலும் தொழில்நுட்பங்களும் அழகுற தமிழில் எழுதப்பட வேண்டும்.

சிந்தியுங்கள் எனது உறவுகளே இதுவரை நமது மூளை பிறரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது போதும்.இந்தியா 2020 என்றார் எனது கலாம் ஐயா இன்று அவர் இல்லையென்றாலும் அவரின் நம்பிக்கை விதைகள் நாம் தான் என்பதை உணர வேண்டும். இந்தியா வல்லரசு அவரின் இலட்சியம் இந்தியா நல்லரசு இதுவே நமது முதல் இலட்சியமாக இருக்க வேண்டும்.

நல்லாட்சி மலர்ந்திட நல்ல தலைமையை உருவாக்கிட நல்லரசு அமைத்திட உங்களில் ஒருவராக நான்.

வைசாலி செல்வம்.

சனி, 20 மே, 2017

வெளியே வா...




கோழிக்குஞ்சாக உன்னை
அடைக்காத்தது போதும்..
வெளியே வா ஒரு கழுகு குஞ்சாக..
உன்னை ஒரு வட்டத்தில் சுழலும்
பந்து போல சுழல வைக்க பார்க்காதே..
வெளியே வா சதம் அடிக்கலாம்..
மனிதன் என்ற  ஆணுக்குள் உன்னை சிறைப்பிடித்ததை மறந்திடு..
வெளியே வா மனிதியாக..
பெண்ணே உன் பெண்மை எனும் சிறகுகளை வலிமையாக்கி
விண்ணில் பறக்கலாம் வெளியே வா..
இன்னும் உன்னை அறியாமை என்ற நிலைக்குள் தள்ளி விடாதே..
ஆணுக்கு நிகராக பெண்களும் வளர்ச்சி அடைந்து வரும் தலைமுறையில்
தான் நீ  இருக்கிறாய்..
அன்று நம் பாரதி கண்ட கனவை
இன்று நிறைவேற்றலாம் துணிவோடு.. நிமிர்ந்த நன்னடை கொண்ட பெண்ணாக வெளியே வா நீயாக..
சுதந்திர உலகில் நீ மட்டும் ஏன் உன்னை விடுதலை செய்ய மறுக்கிறாய்..
பேதைமை விடுத்து வெளியே வா..
வாகை சூடலாம் பெண்ணே..
வெளியே வா..

புதன், 3 மே, 2017

கற்பது எளிமையே..




கற்பது பசுவை போன்றது.
அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும். அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும்.ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

-சாணக்கியன்

கே. எஸ். ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2017-2018 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வரு‌கிறது.

Students Admission open for the academic year of 2017-2018.

வியாழன், 6 ஏப்ரல், 2017

சுவையான குடிநீர்




''சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும். மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை ஸ்பெஷலாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள்.

மண் பானையைச் செய்யும்போதே இரண்டு பானைகளில் தலைமுடி அளவுக்கு நுண்ணிய துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள். பானையைத் தயாரித்த பின்பு அப்படித் துளையிட முடியாது. உடைந்துவிடும். மூன்றாவது பானையில் குழாய் இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய் இணைப்பு வைத்த பானையின் மேல் துளையிடப்பட்ட இரண்டு பானைகளையும் அடுக்கிவையுங்கள். நடுப் பானையில் தேங்காய் சிரட்டையை எரியவைத்துப் பொடித்தோ அல்லது கரித் துண்டுகளாகவோ சுமார் ஒன்றரை கப் அளவுக்கு நிரப்பிக்கொள்ளுங்கள். மேல் பானையில் சுமார் 20 கூழாங்கற்களை நிரப்புங்கள். இப்போது, மேல் பானையில் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை மெதுவாக ஊற்றி நிரப்புங்கள். இரவில் தண்ணீர் ஊற்றினால், விடிந்த பின்பு அடிப்பானையில் குடிநீர் சேகரமாகிவிடும். ப்ளோரைடு உள்ளிட்ட நச்சுக் கனிமங்களை அகற்றி சுமார் 250 டி.டி.எஸ்ஸுக்குக் கீழே இருக்கும் கிரிஸ்டல் கிளியர் குடிநீர் இது. குடிக்கும்போது ஏதாவது ஒரு ஃப்ளேவர் வேண்டும் என்பவர்கள், தேங்காய் சிரட்டைக்குப் பதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோல்களைக் காயவைத்து எரித்து அந்தக் கரித்தூளை நிரப்பலாம். கரித்தூளையும் கூழாங்கற்களையும் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.

தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஃப்ளோரைடு தன்மை அதிகம் இருக்கும் தண்ணீரைக்கூட இந்த முறையில் சுத்தமான குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள். ஆனால், கடல் நீர் ஊடுருவிய நிலத்தடி நீர் மற்றும் தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள் கலந்த நீரை இந்த முறையில் சுத்தம் செய்ய முடியாது.

தமிழன் உருவாக்கிய அதிசயம் !!!





கும்பகோணம் "தாராசுரம்" கோயிலில் உள்ள " இசைப்படிகள் " இவை.

ஏழு படிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலை பொக்கிஷத்தில், மேலே உள்ள படியில் சிறிய கல்லை வைத்து விட்டால் அதுவே ஒவ்வொரு படியாக உருண்டு " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற சப்தஸ்வரங்களை எழுப்பும். ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு ஸ்வரங்களை இது இசைக்கும்.

இதன் அருமைகளை அறியாத சிலர் இதன் மீது பெரிய பெரிய கற்களை போட்டு சோதித்ததால் இது சேதமடையத் தொடங்கியது. அதனால், இப்போது இந்த படிகளை சுற்றி இரும்பு வேலி அமைத்து பூட்டப்பட்டுள்ளது.

உள்ளே சென்று இதன் அருகில் புகைப்படம் எடுக்க மட்டும் இப்போது அனுமதிக்கப்படுகின்றது. இதன் இசையை கேட்க விரும்புவோர் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றால், அவர்களே இசைத்து காண்பிக்கிறார்கள்.

இந்த கோயிலை கட்டியவர் " ராஜா ராஜா சோழன் " மகன் , " ராஜேந்திர சோழன் ". கும்பகோணத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பயணித்தாலே இந்த பிரம்மாண்டமான அழிகிய கோயில் வந்து விடும் ".