ஞாயிறு, 15 ஜனவரி, 2017

இலித்தியம்


                                   இலித்தியம் 
                          Image result for லித்தியம்
இலித்தியம் (Lithium, Li) என்பது வெள்ளி போலும் தோற்றம் உள்ள மென்மையான ஒரு மாழை (உலோகம்). இது தனிம அட்டவணையில் 3ஆவதாக உள்ள ஒரு தனிமம். இதன் அணுவெண் 3.
இதன் அணுக்கருவில்மூன்று நேர்மின்னிகளும் நான்கு நொதுமிகளும் உள்ளன. இது மிகவும் மென்மையாக உள்ளதால், ஒரு கத்தியால் எளிதாக வெட்டலாம். மாழைகள் (உலோகங்கள்) யாவற்றிலும் மிகக்குறைவான எடை கொண்ட மாழை இலித்தியம் ஆகும். இலித்தியத்தின் அடர்த்தியும், நீரில் பாதியளவு தான். இலித்தியம்மின்கலங்களிலே பெருமளவு பயன்படுகின்றது.
இலித்தியத்தின் அணு எண் 3 ஆகையால் இதன் அணுக்கருவிலே மூன்று நேர்மின்னிகள் (proton, புரோட்டான்) உள்ளன; மூன்று எதிர்மின்னிகள் (electron, இலத்திரன்) அணுச் சுழல் பாதைகளில் உலா வருகின்றன. இந்த மூன்று எதிர்மின்னிகளில், இரண்டு எதிர்மின்னிகள் உட்சுற்றுப்பாதையில் அதற்கான நிறைவுற்ற நிலையில் உள்ளன. ஆனால், ஓர் எதிர்மின்னி மட்டும் தனியாய் அடுத்த சுழல் பாதையில் இருப்பதால், இவ்வெதிர்மின்னியை வேதியியல் வினைகளில் எளிதில் இழக்கின்றது. இதனால், எளிதாக நீரோடு இயைவதால் (வேதியியல் வினையால் சேர்வதால்), இலித்தியம் தனியாய் எளிதில் கிடைப்பதில்லை. தூய இலித்தியம், காற்றிலும் நீரிலும் எளிதில் தீப்பற்றும் ஒரு தனிமம். இதன் தன்வெப்பக் கொள்ளளவு எல்லாத் திண்ம நிலைப் பொருள்களிலும் மிகப்பெரியது. இதன் பெறுமானம் 3582 J Kg-1 K-1ஆகும். அதாவது ஒரு கிலோகிராம் எடையுள்ள இலித்தியத்தின் வெப்பநிலையை ஒரு கெல்வினால் உயர்த்த வேண்டுமெனில், 3582 யூல் (Joule) ஆற்றல் தரவேண்டும்.
இலித்தியம் புவியில் கிடைக்கும் தனிமங்களில் 33 ஆவது மலிவான பொருள்.[1]. இது உலகில் பரவலாகக் கிடைக்கின்றது. புவியின் புற ஓட்டில் மில்லியனில் 20 முதல் 70 பங்குகள் (ppm) [2] என்ற அளவில் உள்ளது.
வேதியல் இயல்புகள்
இலித்தியம் நீருடன் இலகுவில் தாக்கம் புரிந்து இலிதியம் ஐதரொக்சைட்டையும் ஐதரசன் வாயுவையும் உருவாக்கும். எனினும் இதன் தாக்கம் ஏனைய கார உலோகங்களின் அளவுக்கு வீரியமானதல்ல. இலிதியத்தை வளியில் திறந்து வைத்தால் கறுப்பு நிறப் படை உலோகத்துக்கு மேல் உருவாகும். இதுஇலிதியம் ஐதரொக்சைட்(LiOH + LiOH.H2O), இலிதியம் நைட்ரைட் (Li3N), இலிதியம் கார்பனேட்(Li2CO3) (இலிதியம் ஐதரொக்சைட்டும் காபனீரொக்சைட்டும் தாக்கமுறுவதால் தோன்றுவது.) ஆகிய சேர்மங்களின் கலவையாகும்.
இலித்தியத்தை நெருப்புச் சுவாலை மேல் பிடிக்கும் போது இலிதியத்தின் சேர்மங்கள் சிவப்பு நிறச் சுவாலையைக் கொடுக்கும்; பின்னர் இலிதியம் வெண்ணிறச் சுவாலையைக் கொடுக்கும்.
சாதாரண சூழ்நிலையில் நைதரசனுடன் தாக்கமடையும் ஒரே உலோகம் இலிதியம் ஆகும். இலிதியமும்மக்னீசியம் உலோகமும் மூலைவிட்டத் தொடர்பு கொண்டவையாகும். நைட்ரைட் உருவாக்கல், எரியும் போது ஒக்சைட்டுடன் (Li2O) பரஒக்சைட்டையும்(Li2O2) தோற்றுவித்தல், இவ்வுலோகங்களின் நைட்ரைட்டுகளும் கார்பனேற்றுகளும் வெப்பப்பிரிகை அடைதல் ஆகிய இயல்புகளில் மக்னீசியம் மற்றும் இலிதியம் ஒத்த இயல்பைக் காட்டுகின்றன. எனவே இவை மூலைவிட்டத் தொடர்பைக் கொண்டுள்ளன.
உயர் வெப்பநிலையில் ஐதரசனுடன் தாக்கமடைந்து இலிதியம் ஹைட்ரைட்ஐ (LiH) உருவாக்கும்.

பயன்கள்

கண்ணாடி மற்றும் செராமிக்

இலித்தியம், ஹைட்ரஜனுடன் கூடி,உடனடியாக இணைந்து இலித்தியம் ஹைட்ரைட் உண்டாகின்றது. இதை நீரிலிடும் போது அவை பிரிகின்றன.ஒரு கிலோ இலித்தியம் ஹைட்ரைட் 2800 லிட்டர் ஹைட்ரஜன் வளி மண்டல அழுத்தத்தில் அறை வெப்ப நிலையில் தருகிறது. ஹைட்ரஜன் அவசரத் தேவைக்கு உகந்த மூலமாக இதைக் கொள்கின்றனர். இலித்தியம் சேர்ந்த கண்ணாடி வெப்பத்தைக் கூடுதலாகத் தாக்குப் பிடிக்கின்றது. வெப்ப மண்டலங்களில் கட்டடங்களின் கட்டுமானப் பொருளாகவும் , வெப்பமானிகள் தொலைக்காட்சி பெட்டியின் சின்னத் திரை மற்றும் சூரிய ஒளி எதிரொளிப்பான் போன்றவற்றில் பயன்பாட்டுப் பொருளாகவும் இலித்தியம் கண்ணாடி பயன்தருகிறது.

மின்கருவிகள்

இலித்தியம் புளுரைடு படிகம் புறஊதாக் கதிர் உடுருவும் திறனை மிகைப் படுத்துகின்றது. புறஊதாக் கதிர் தொடர்பான ஆய்வுகளில் இது பயன்தருகிறது. இதயத் துடிப்புச் சீராக்கி (Pace Maker) போன்ற பல சாதனங்களுக்கு இலித்தியம் மின்கலம் (lithium cell) உதவுகிறது. இதில் நேர்மின் வாயாக இலித்தியமும் மின்னாற் பகுபொருளாக இலித்தியக் கூட்டுப் பொருளான இலித்தியம் புளூரைடு அல்லது அயோடைடு பயன்படுகின்றது. இதன் எதிர் மின்வாயாக கார்பன் மோனோ புளூரைடு .
அல்லது அயோடைடு செயல்படுகின்றது. இது 1.5-3.0 வோல்ட் மின்னழுத்தம் தரக்கூடியது. எனினும் இத்தகைய மின்கலத்தைப் புதிப்பித்துக் கொள்ள முடிவதில்லை. 40 பாகை செல்சியசுக்கு மேலும் - 20 பாகை செல்சியசுக்கு கீழும் இம் மின்கலத்தைப் பயன்படுத்த முடிவதில்லை.

உயவுப் பொருட்கள்

இலித்தியம் ஐதராக்சைடை ஒரு கொழுப்புப் பொருளுடன் சேர்த்து சூடு படுத்த இலித்தியம் சோப்பு கிடைக்கின்றது. இது எண்ணெயின் பாகுத் தன்மையை அதிகரிக்கின்றது. இதனால் கொழுப்புப் பசை (Grease) தயாரித்து உயவுப் பொருளாகப் பயன்படுத்த முடிகின்றது. இசுட்டியரேட்டு (stearate), பால்மிட்டேட்டு (Palmitate) போன்ற சில கரிம இலித்திய கூட்டுப் பொருட்கள் முதல் தரமான மசகுப் பொருட்களாக விளங்குகின்றன.

இலித்தியத்தின் மருத்துவப் பயன்கள்

இரத்தத்தில் யூரிக் அமில அதிகரிப்பு உடல் நலக் குறைவை ஏற்படுத்தும். இது முடக்கு வாதம் சிறுநீர்ப்பைக்கல், மன நோய், மன அழுத்தம் போன்ற குறைபாடுகளை ஏற்படுத்தும்.இதற்கு தூய இலித்தியம் கார்போனேட் டு மருந்தாக அளிக்கப் படுகின்றது.மனநலம் பாதிக்கப்பட்டு சித்தபிரமை பிடித்த நோயாளிகளுக்கான சிகிச்சை முறையில் இலித்தியம் கார்போனேட்டு பயன்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக